Monday, 20 May 2013

உலக இறுதி தீர்ப்பு

உலக மக்களுக்கு உலக இறுதியில் நடைபெறும் சம்பவங்களை வேதாகமம் ஏற்கனவே அறிவித்துள்ளது. வேதாகமத்தின் மிகவும் பயங்கர செய்தியாக அமைந்துள்ள இறுதி தீர்ப்புக்கள் பற்றிய முன்னறிவிப்புக்கள் மிகவும் அவதானம் செலுத்தி பார்க்கப்படவேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. இங்கு இயேசு கூறிய இறுதிதீர்ப்புக்கள் மிகவும் கவனத்தை கவருகின்றன. மனிதத்தன்மையுள்ளவராக பிறரை அன்புடன் ஏற்றுக்கொண்டவரான சாந்தமுள்ள கிறிஸ்துவானவர் உலக இறுதி தீர்ப்புக்குறித்து மிகவும் கடுமையாக எச்சரிப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கை குறித்து கணக்கொப்புவிக்கவேண்டிய மிகவும் கடுமையான காரியத்தை அறிவிக்கின்றார். அவர்கள் தங்களுடைய வாழ்வில் செய்த கிரியைகளுக்குத் தக்க பலன்களை அனுபவிப்பதற்காக தங்கள் வாழ்நாட்களை குறித்த கணக்கொப்புவிப்பை அறிவிக்க வேண்டியதாக உள்ளது. முதலாவதாக குறிப்பிடப்படும் அதிகூடிய தண்டனை பெறக்கூடியவர்களை இயேசுக்கிறிஸ்துவே சுட்டிக்காட்டுகின்றார். மதத்போதகர்கள் இவ்வித ஆக்கினையை அடைவார்கள் (1). இயேசுவின் சுவிசேஷத்தை தள்ளிவிட்ட நபர்களுக்கும் நகரங்களுக்கும் இவ்வித இறுதி தீர்ப்பு மிகவும் கொடூரமாக அமையும் என்பதாக இயேசு கூறுகின்றார் (2). கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்ப்பையும் ஏற்றுக்கொள்ளாமலம் கிறிஸ்துவை உதறிதள்ளிவிட்டவர்களுக்கு மிகுந்த ஆக்கினை உண்டு (3). ஓவ்வொரு மனிதனும் தனது ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் (4). இயேசுக்கிறிஸ்து கூறியபடி ஒருவன் கொலையை விட குறைவான குற்றத்தை செய்திருந்தாலும் அவன் நரக ஆபத்திலே உள்ளான். மனிதர் தாம் மற்றோக்கு காட்டிய அன்பின் பிரகாரமாகவே அவர்கள் இறைவனது அரசிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவர். அல்லது அதற்கேற்ற விதத்தில் நரக ஆக்கினையை அடைவர்.

1. குறிப்பாக மாற்கு 12:38-40ல் நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்டஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். ஏனெனில் வெளிப்பிரகாரமாக பரிசுத்த வாழ்வை நடத்தி உள்ளான விதத்தில் உலக ஆசாபாசங்களுக்கு உட்பட்டு நடப்போர் இறுதி தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது. அவர்கள் இறுதி தீர்ப்பில் அதிக ஆக்கினை அடைவார்கள் என இயேசு கிறிஸ்து எச்சரிக்கின்றார்.

2. இயேசுவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாத நகரங்களுக்கு இறுதி தீர்ப்பில் மிகவும் கொடிய தண்டனையை அனுபவிக்க வேண்டிய நேரிடும். அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும். நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3. மனந்திரும்ப விருப்பமற்றவர்களுக்கு ஆக்கினை உண்டு. அவர்களது சந்ததிகளுக்கும் அவ்விதமே நேரிடும்.

4. மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எப்படி இந்த ஆக்கினையிலிருந்து தப்பிக்கொள்வது. கர்த்தருடைய நாமத்தினால் வருகின்ற இயேசுக்கிறிஸ்துவை ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் அவரை காணாதிருப்பீர்கள். மத்தேயு 23:37-39 “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்”. ஏனெனில் உலகின் பாவங்களுக்காக மரித்தவர் கிறிஸ்துவே. அவரது மரணம் மூலமாக நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள அவரை விசுவாசிப்பதே மிகச்சிறந்த வழிமுறையாகும். இன்றும் உயிரோடு உள்ளவராக எம்மை வழிநடத்துபவரான கிறிஸ்துவை விசுவாசிப்பதே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். நித்திய ஜீவன் இலவசமாய் இறைவனால் கொடுக்கப்படுகின்றது. இந்த இலவச நித்திய வாழ்க்கையை அனுபவிக்க செய்யவேண்டியது ஒன்றே. இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். ஏனெனில் வரப்போகும் கிறிஸ்து இராஜாவாக உலகத்தை நியாயந்தீர்க்க வருகின்றார். அவரது வருகையில் உத்தமாய் இருந்தோர் நித்திய ஜீவனைபெற்று பரலோகத்தை அடைவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவரை எதிர்ப்போர் மிகுந்த ஆக்கினை அடைவதற்காய் நரகினில் தள்ளப்படுவதற்காய் மிகப்பெரிய நியாயத்தீர்ப்பிற்கு முகங்கொடுக்க வேண்டிய அவமானத்திற்குள்ளாய் தங்களை ஆயத்தப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment