Sunday, 26 May 2013

நம் வாயின் வார்த்தைகள்

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. - (மல்கியா 3:16).

இரண்டு சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள் என வைத்து கொள்வோம். அவர்கள் என்ன பேசி கொள்வார்கள்? முதலில் நலம் விசாரிப்பார்கள், பின்பு அவரவர் தங்கள் கஷ்டத்தை கூறுவார்கள். தங்கள் குடும்ப நிகழ்வுகளை கூறுவார்கள். தங்கள் பிள்ளைகளை குறித்து பேசி கொள்வார்கள். அதோடு முடிந்து விடுமா? பக்கத்து வீட்டு காரர்களை பற்றியும், எதிர்த்த வீட்டுகாரர்களை பற்றியும் பேசாவிட்டால் அவர்களது பேச்சு முடியாது. அதனால் ஏதாவது பிரயோஜனமுண்டா?

வேதம் சொல்கிறது, கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் (எபேசியர் 4:29) என்று.
ஒரு முறை இரண்டு விசுவாசிகள் பேசி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னார், "பரிபூரணமாய் தமக்கு ஒப்புக்கொடுக்கிற மனுஷனை தேவன் வல்லமையாய் உபயோகப்படுத்த எவ்வளவு ஆவலாய் இருக்கிறார் தெரியுமா" என்றார். இந்த வார்த்தைகளை ஆறடி தொலையில் நின்று கொண்டிருந்த வாலிபனின் காதுகளில் விழுந்தது. பூரணமாய் ஒப்புகொடுக்கிற மனிதனை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த கூடுமானால், நான் ஏன் என்னை பூரணமாக ஒப்புகொடுக்க கூடாது? என்று எண்ணினான். ஆந்த வாலிபன்தான் பிரசித்து பெற்ற ஊழியரான் டீ.எல் மூடி என்பவர். இருவரின் சாதாரண உரையாடல் ஒரு வாலிபனை கர்த்தருக்கு பூரணமாக தன்னை அர்ப்பணிக்க வைத்தது. இதுதான் பக்தி விருத்திக்கேதுவான நல்ல வார்த்தை.

நமது வேலையிடத்தில் கொஞ்சநேரம் இடைவெளி கிடைத்தால் போதும், அங்கு வேலை செய்கிறவர்களிலிருந்து, ஒவ்வொருவரை குறித்தும் வெட்டியாக பேசி நம் நேரத்தை வீணாக செலவழித்து விடுகிறோம். அந்த நேரத்தில் மற்றவருடைய ஆத்துமா இரட்சிக்கப்படும்படி பேசினால் எத்தனை நலமாயிருக்கும்!
கிறிஸ்துவை ஏற்று கொண்ட நாம் யாரும் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை. ஆனால் பிறரை குறித்து புறங்கூறுதலும் பாவமே. இதனால் அவரை பற்றி அந்த நபர் கொண்டிருந்த நல்லெணணம் அழிந்து விடுகிறது. பகைமையை வளர்க்கிறது. அது போல குறை கூறுதலும் அநேகருடைய மனதை புண்படுத்தி விடுகிறது. கோபமான வார்த்தைகள் காட்டு தீக்கு சமானம். முழு உறவினர்களின் உறவையும் அழித்து விடும் சக்தி கொண்டது. மாறாக பிறரை கர்த்தருக்குள் வளர செய்யும் பக்தி விருத்தியடைய செய்யும் வார்த்தைகள் உண்டு. பிறரது காயங்களை ஆற்றும் ஆறுதலான வார்த்தைகள் உண்டு. இத்தனை நல்ல பேச்சுகள் இருக்க நாம் இன்னும் கெட்டவைகளையே பேசி கொண்டிருப்போமானால், இனிய பழத்தை வேண்டாமென்று ஒதுக்கி, காயை சாப்பிட்டதற்கு சமமாகும்.

பிரியமானவர்களே, நீங்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுகிறீர்கள்? நான் இரட்சிக்கப்பட்ட போதே ஒரு தீர்மானம் எடுத்தேன், யாரையும் புண்படுத்தும் வார்த்தைகளை பேசுவதில்லை என்று. இன்று வரை அதை கடைபிடிக்க தேவன் கிருபை செய்துள்ளார். நான் புண்படுமாறு பேசியவர்கள் உண்டு. ஆனால் என்னால் புண்பட்டேன் என்று யாரும் கூற முடியாது. அப்படிப்பட்டதான தீர்மானத்தை எடுப்போமா? நமது வார்த்தைகள் உறவுகளை இணைத்துள்ளதா? அல்லது உடைத்துள்ளதா? உங்களது வார்த்தைகள் ஒருவரை நீதிக்குட்படுத்தியுள்ளதா? அல்லது பின்மாற்றம் அடைய செய்துள்ளதா? நமது வார்த்தைகள், பிறருக்கு பிரயோஜனமாயிருந்ததா, அல்லது அவர்களது நேரத்தை வீணடித்ததா? என்று யோசித்து பார்ப்போமா? 'அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்' என்று வேதம் சொல்கிறது. நாம் பேசுவதை கர்த்தர் கேட்கிறார் என்ற உணர்வு இருந்தால் நாம் பிரயோஜனமான வார்த்தைகளை தவிர வேறு வார்த்தைகளை பேச மாட்டோம். பக்திவிருத்திக்கேதுவான வார்த்தைகளையே பேச நம் ஒவ்வொருவருக்கும் தேவன் தாமே கிருபை செய்வாராக!

No comments:

Post a Comment