Thursday, 23 May 2013

காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். - (எபேசியர் - 5: 15,16)

1887-ம் வருடம் இம்மானுவேல் நெஞ்சர் (Immanuel Nenjer) என்பவர் தன் பணியாளிடம் 20 டாலரை கொடுத்து, காய்கறி வாங்கி வர சொன்னார். அந்த பணியாள் அப்படியே போய் வாங்கிவிட்டு, அந்த 20 டாலர் பணத்தை, கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்த போது, அதை வாங்கிய பெண்ணின் கைகளில் அந்த பணத்திலிருந்து மை (Ink) கைகளில் பட்டது. உடனே அந்த பெண்ணிற்கு தோன்றிற்று, இந்த ஆள் கள்ளநோட்டு அடிக்கிறாரா என்று. ஆனால் அந்த பெண்ணிற்கு இம்மானுவேலை வெகு நாட்களாக தெரியும், ஆகவே மிச்ச காசை கொடுத்து விட்டு, திரும்ப அந்த நோட்டை பார்த்தபோது, அதிலிருந்த மை கரைந்தது தெரிய வந்தது. உடனே போலீசுக்கு சொல்லி, அவர்கள் இம்மானுவேலின் வீட்டை பரிசோதித்தபோது, வீட்டின் மேல் அட்டிகையில், அவர் கள்ள நோட்டு உருவாக்குவது தெரிய வந்தது. அந்த மனிதர் ஒரு அற்புதமான ஓவியர். அவர் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் 16,000 டாலருக்குமேல் விற்பனை ஆனது. அப்படியிருக்கும்போது, அவர் இந்த 20 ரூபாய் நோட்டை கள்ள நோட்டாக வரைந்து விற்றது எத்தனை முட்டாள்தனம்! இதில் என்ன ஒரு காரியம் என்றால், அவர் 20 டாலர் நோட்டை வரைவதற்கும், அந்த 16,000 டாலர் படத்தை வரைவதற்கும் எடுத்து கொள்ளும் நேரம் ஒன்றுதான்.

ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு பதில் அவர் கள்ளநோட்டை வரைந்து, தன்நேரத்தை வீணடித்தது எத்தனை முட்டாள்தனம்! எத்தனை ஞானமற்ற செயல்!
நாமும் கூட அநேக வேளைகளில் அப்படிதான் இருக்கிறோம். கடந்த நாளில் நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவழித்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். எத்தனை முறை தேவையில்லாத காரியத்திற்காக நம் நேரத்தை வீணாக செலவழித்திருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயமாக நாம் எல்லாரும் குற்றவாளிகளாக தான் இருப்போம்.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் 1,440 நிமிடங்கள் கர்த்தர் கிருபையாக கொடுத்திருக்கிறார். ஒருவருக்கும் கூடுதலும் இல்லை, குறைச்சலும் இல்லை. இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் மன்னா கொடுக்கப்பட்டபோது, அதை அடுத்த நாளுக்காக எப்படி வைக்கமுடியாதோ, அதைப் போல நாமும் இந்த நாளிலிருந்து கொஞ்ச நேரத்தை எடுத்து, அடுத்த நாளுக்காக வைக்க முடியாது. அன்றன்று கொடுக்கிற நேரத்தை அன்றன்றே நாம் செலவு செய்ய வேண்டும். ஆனால் அதை எப்படி செலவு செய்கிறோம் என்பது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது.போன நேரத்தை நாம் திரும்ப பெற முடியுமா? ஆகையால் நமக்கு கொடுக்கப்பட்ட அருமையான நேரத்தை ஞானமாக மகிழ்ச்சியாக வெற்றியாக செலவழிப்போம். உங்களுக்கு தெரியுமா?

ஒரு வருடத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு வருடம் பள்ளியில் தோல்வியுற்ற மாணவனிடம் கேட்க வேண்டும்.
ஒரு மாதத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே பிள்ளையை பெற்றெடுத்த தாயிடம் கேட்க வேண்டும்.
ஒரு வாரத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.
ஒரு நிமிடத்தின் அருமையை அறிந்து கொள்ள தனது வேலை நேர ரயிலை தவறவிட்ட மனிதனிடம் கேட்க வேண்டும்.
ஒரு நொடியின் அருமையை அறிந்து கொள்ள தனது காரின் பெரிய விபத்தை தவிர்த்த மனிதனிடம் கேட்க வேண்டும்.
ஒரு வாழ்நாளின் அருமையை அறிந்து கொள்ள மறுமையில் வெறுங்கையாய் தேவனிடம் கணக்கு ஒப்புக் கொடுக்கும்போது அறிந்து கொள்வோம்.

ஒருவருக்காகவும் நேரம் காத்திருப்பதில்லை. ஆகையால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக செலவழிப்போம். ஆத்துமாக்களை கர்த்தரிடம் சேர்ப்போம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திராமல் சோம்பலாய்
காலங்கழித்தோர் அந்நாளில்
துக்கிப்பார் நிர்ப்பந்தராய்
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங் கையனாக உம்மை
கண்டு கொள்ளல் ஆகுமா?

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் நீர் எங்களுக்கு கிருபையாய் கொடுக்கும் நேரத்தை வீணாக செலவழிக்காதபடி பயனுள்ளதாய் செலவழிக்க கிருபை தாரும். நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்கு தருவீராக. ஒவ்வொரு நாளும் மிகவும் விலையேறபெற்றதென்பதை நாங்கள் உணர்ந்து, எங்களால் இயன்ற வரை ஆத்துமாக்களை உம்மிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment