இடம்: நீதிமன்றம்
நேரம்: காலை 11.00 மணி
பாத்திரங்கள்: நீதிபதி மற்றும் பாஸ்டர் ஜோன்ஸ்
நீதிபதி:
பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! நீங்கள் உங்கள் திருச்சபைக்கு வரும் மக்களிடம்
கடந்த 20 ஆண்டுகளாக அவர்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவன்
பெயரைச் சொல்லி ஏமாற்றிப் பெற்றதாகவும். தசமபாகம் தருபவர்களை இறைவன்
ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராதவர்கள் மீது தேவனுடைய சாபம்
வருமென்று மிரட்டியும் தசமபாகத்தைப் பெற்றதாக தங்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், எமக்கு
இறைவன் அருளின வேதம் எதைச் சொல்லுகிறதோ அதையே நான் என் மக்களுக்கு
போதித்தேன். ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்க்கு தசமபாகம் கொடுத்தான் தேவன்
அதினிமித்தம் அவனை ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும் வெள்ளியும்
பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.
நீதிபதி:
அது சரி அல்ல! ஆதியாகமம் 13:2 இல் தான் ஆபிராம் மிருகஜீவன்களும்
வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம்
கூறுகிறது.
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! அதைத்தானே நானும் கூறுகிறேன்?
நீதிபதி:
அந்த வசனம் ஆதியாகமம் 13 ஆம் அதிகாரத்தில் வருகிறது. ஆனால் ஆபிரகாம்
மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தது அதற்கு அடுத்த அதிகாரத்தில்தான்
வருகிறது (ஆதி14:20) அப்படியானால் மெல்கிசேதேகிற்கு தசமபாகம்
கொடுப்பதற்க்கு முன்னமே ஆபிரகாம் ஐசுவரியவானாய் இருந்தான் என்பது தெளிவாக
இருக்கிறதல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! நீங்கள் சொல்வதும் சரிதான்.
நீதிபதி: அப்படியானால் ஆபிரகாமின் பொருளாதார ஆசீர்வாதம் தசமபாகம் கொடுத்ததினால் வந்ததல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)
நீதிபதி:
பாஸ்டர் ஜோன்ஸ் அவர்களே! ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததினால் தேவன் அவனை
ஆசீர்வதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் ஆபிரகாம் எத்தனை முறை
மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப்
பட்டிருக்கிறது?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒரே ஒரு முறைதான்.
நீதிபதி: அவன் மாதந்தோறும் கொடுத்ததாகப் பதிவு செய்யப்படவில்லை அல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை
நீதிபதி: சரி, ஆபிரகாம் தான் தசமபாகமாகச் செலுத்தியவற்றை எங்கிருந்து பெற்றான்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அவை அவனுக்கு யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளாகக் கிடைத்தவை.
நீதிபதி:
அப்படியானால் அவன் தனது சுய சம்பாத்தியமான வருமானத்திலிருந்து
கொடுக்கவில்லை மாறாக தனக்கு சொந்தமல்லாத யுத்தத்தில் மீட்கப்பட்ட
பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தான் என்று சொல்லுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம் அப்படித்தான் வேதம் கூறுகிறது.
நீதிபதி:
ஆபிரகாம் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து அல்லது சொந்தப் பொருளிலிருந்து
மெல்கிசேதேகிற்கோ அல்லது வேறு யாருக்குமோ தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அது…..வந்து…இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
நீதிபதி:
வேதத்தை நன்கு கற்றறிந்து போதகராக இருக்கும் நீங்கள் “நினைக்கிறேன்”
என்றெல்லாம் நீதிமன்றத்தில் பதிலளிக்கக் கூடாது. ஆபிரகாம் தனது சொந்தப்
பொருளிலிருந்து எடுத்து தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் எங்கேனும் பதிவு
செய்யப்பட்டுள்ளதா? இல்லையா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, நான் படித்தவரை எங்கும் அப்படிப் பதிவு செய்யப்பட வில்லை.
நீதிபதி: சரி..ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு எவைகளையெல்லாம் தசமபாகமாகக் கொடுத்தான்?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளிலிலிருந்து கொடுத்ததாக வேதம் சொல்லுகிறது.
அது கால்நடைகளாகவோ, உணவாகவோ அல்லது மக்கள் பயன்படுத்திய பிற பொருட்களாகவோ
இருக்கலாம்.
நீதிபதி: பணத்தை தசமபாகமாகக் கொடுத்ததாக அங்கே குறிப்பிடப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை
நீதிபதி:
சரி…ஆபிரகாம் விஷயத்தில் எனது கடைசிக் கேள்வி, மெல்கிசேதேகிற்கு தசமபாகம்
கொடுக்கச் சொல்லி தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டாரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆபிரகாம் அதைத் தானே விரும்பிப் பரிசாகக் கொடுத்தான்
நீதிபதி:
நீங்கள் சொன்னவைகளை எல்லாம் வைத்துப் பார்த்தால், ஆபிரகாம்
மெல்கிசேதேகிற்கு தானே விரும்பித்தான் பரிசாகக் கொடுத்தான், அதைக்
கொடுக்கும்படி யாரும் அவனை நிர்பந்திக்கவில்லை, கொடுத்தது பணமும் அல்ல
என்பது தெளிவாக விளங்குகிறது. அப்படியானால் எல்லாக் கிறிஸ்தவர்களும்
தங்களது மாத வருமானத்தில் 10% பணத்தை திருச்சபைக்கு தர வேண்டும் என
நிர்பந்திப்பது என்ன நியாயம்?
நீங்கள்
உங்கள் சொந்த வாயால் ஒப்புக்கொண்ட காரியங்களை வைத்தே இதுவரை உங்கள் சொந்த
லாபத்திற்காக வேதத்தை திரித்து உபதேசித்து மக்களைச் சுரண்டியிருக்கிறீர்கள்
என்பது புலனாகிறது.
பாஸ்டர்.ஜோன்ஸ்:
நீதிபதி அவர்களே! சற்றுப் பொறுங்கள், தசமபாகம் விஷயத்தில் ஆபிரகாமின்
காரியத்தை மேற்கோள் காட்டிப் போதித்தது எவ்வளவு மதியீனம் என்பதை நான்
இப்பொழுது உணர்கிறேன். ஆனால் தசமபாகம் குறித்ததான என்னுடைய நம்பிக்கைக்கு
ஆதரவாக வேதத்தில் இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. யாக்கோபு தேவனுக்கு
எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. நாம் அவருடைய
மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
நீதிபதி: சரி..யாக்கோபு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். நீங்கள் மேற்கோள் காட்டிய பகுதியை வேதத்திலிருந்து வாசியுங்கள்.
பாஸ்டர்.ஜோன்ஸ்:
நிச்சயமாக…ஆதியாகமம் 28:20-22 வரை வாசிக்கிறேன் கேளுங்கள் “அப்பொழுது
யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக்
காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என்
தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர்
எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு
வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம்
செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்” என்று வேதம்
தெளிவாகச் சொல்லுகிறது.
நீதிபதி: நாம் யாக்கோபுடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா பாஸ்டர்.ஜோன்ஸ்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! யாக்கோபு தசமபாகம் தருவதாகப் பொருத்தனை பண்ணினார் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.
நீதிபதி:
இங்கு நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன், யாக்கோபு என்ன
பொருத்தனை பண்ணினார்? தேவன் என்னை ஆசீர்வதித்தால் மாத்திரமே…தசமபாகம்
தருவேன் என்றல்லவா கூறுகிறார். நான் தசமபாகம் தரவேண்டுமானால் தேவன்
முதலாவது என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு வருகிறது. நாமும்
இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: நான் அதைக் குறிப்பிடவில்லை…
நீதிபதி: வேறு எதைக் குறிப்பிட்டீர்கள்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: நாமும் கடவுளுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது.
நீதிபதி:
நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக வேதத்தைப் புரட்டுகிறீர்கள் என்பது
மீண்டும் புலனாகிறது. அதுமட்டுமன்றி யாக்கோபு தனது பொருத்தனையை எப்படிக்
காப்பாற்றினார் என்பதற்கான வேத ஆதாரங்களை நீங்கள் நீதிமன்றத்தில்
சமர்பித்தாக வேண்டும். மேலும் அவர் எங்கு அல்லது யாரிடத்தில் அந்த
தசமபாகத்தைக் கொடுத்தார் என்பதற்கான வேத ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும்
ஏனனில் அதைப் பெற்றுக் கொள்ள அந்த காலத்தில் தேவாலயமோ லேவியரோ இல்லை என்பது
உங்களுக்குத் தெரியுமல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
அவர் பொருத்தனையை நிறைவேற்றினார் என்பதற்கான ஆதாரங்களோ அல்லது அதை எங்கு
அல்லது யாரிடத்தில் கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்களோ வேதத்தில் எங்குமே
இல்லை.
நீதிபதி:
யாக்கோபு தானே விரும்பித்தான் அந்தப் பொருத்தனையைச் செய்தார் என்பதும்
மேலும் அது ஒரு நிபந்தனைக்குட்பட்ட பொருத்தனை என்பதும் தெளிவாக இருக்கிறது.
ஆக பொருந்தாத இந்த வேத பகுதியை மேற்கோள்காட்டி தசமபாகம் செலுத்த வேண்டும்
என்பதை கட்டளையாக சபையில் போதிக்கக் கூடாது என்பதை ஒப்புக்
கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
ஒப்புக் கொள்ளுகிறேன், ஆனால் ஜனங்கள் தசமபாகம் செலுத்த வேண்டும் என்று
அறிவுறுத்தும் பல்வேறு வேதவசனங்கள் இருக்கின்றன.
நீதிபதி:
நீங்கள் இதுவரைக் கொடுத்த எந்த பதிலுமே திருப்தியாக இல்லை. நீங்கள் வேத
வாக்கியத்தை எடுத்து அதை உங்கள் லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்
என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஆனாலும் தாங்கள் சமுதாயத்தில் ஒரு
உயர்ந்த பொறுப்பில் உள்ள குடிமகன் என்பதால் தங்கள் வாதத்தை நிரூபிக்க
இன்னும் ஆதாரங்களை எடுத்து வைக்க வாய்ப்பு தருகிறேன்.
பாஸ்டர்.ஜோன்ஸ்:
மிக்க நன்றி! மல்கியாவின் புத்தகத்தில் 3 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனமுதல்
வாசிக்கிறேன் ”மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்.
எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும்
காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள்
எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம்
உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்;
அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும்
உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச்
சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இதிலிருந்து
நாம் தசமபாகம் தரவேண்டும் என்றும் தராவிட்டால் கர்த்தர் சபிப்பார் என்றும்
வேதம் சொல்லுகிறது.
நீதிபதி: இதைக் கர்த்தர் யாரிடம் கூறுகிறார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இஸ்ரவேல் மக்களிடம்…
நீதிபதி: அப்படியா?…மல்கியா 2:1 ஐ வாசிக்க முடியுமா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: சரி, வாசிக்கிறேன்..”இப்போதும் ஆசாரியர்களே இந்தக் கட்டளை உங்களுக்குரியது…”
நீதிபதி: அப்படியானால் மூன்றாம் அதிகாரத்தில் ஆசாரியர்களிடம் பேசி முடித்துவிட்டாரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை யுவர் ஆனர்!
நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! பதில் சொல்லுங்கள் இங்கும் கர்த்தர் பணத்தை தசமபாகமாகச் செலுத்தச் சொல்லுகிறாரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அக்காலத்தில் பணம் புழக்கத்தில் இல்லை
நீதிபதி:
தவறு! வேதவிற்பன்னரான தங்களுக்குத் தெரியாதா? பணப்புழக்கத்தைக் குறித்து
ஆதியாகமத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மல்கியா புத்தகமானது
ஆதியாகமத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. இங்கு
ஆகாரங்களையெல்லாம் பண்டகசாலைக்குக் கொண்டுவரும்படி கட்டளை
கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லேவியரும் தகப்பனற்ற பிள்ளைகளும் ஏழை
விதவைகளும் உண்டு பசியாறும்படிக்கே!
கவனியுங்கள்! இங்கும் கூட தசமபாகம் என்பது ஆகாரமே தவிர பணம் அல்ல…
பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)
நீதிபதி:
இந்தக் கட்டளையானது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஒரு தேசத்துக்குக்
கொடுக்கப் பட்டது. இயேசு கிறிஸ்து அந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி
விட்டார் என்பதையும் இனி நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள்
அல்ல என்பதையும் மறந்துவிட்டீர்களா? இங்கும் கூட நீங்கள் ஆகாரம் என்று
இருக்கிறதை பணம் என்று புரட்டி போதிக்கிறீர்கள். ஆகாரம் என்று இருந்த
தசமபாகத்தை தேவன் பணம் என்று மாற்றிவிட்டார் என்று வேதத்தில் ஏதேனும் ஒரு
ஆதாரமாவது இருக்கிறதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: எனக்குத் தெரிந்து இல்லை…
நீதிபதி:
பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு
தேவன் கொடுத்த ஒரு குறிப்பிட்ட கட்டளையை எடுத்து, திரித்து அதைப் புதிய
ஏற்பாட்டு ஜனங்களுக்குப் போதிக்கிறீர்கள், உங்களுக்கு வருமனம்
வரவேண்டுமென்பதற்காக. இதைத் தவறு உங்கள் மனசாட்சி உங்களுக்கு
உணர்த்தவில்லையா?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பட்டிலும் கூட இயேசு தசமபாகத்தைக்
குறித்து கட்டளை கொடுத்திருக்கிறார். மத்தேயு 23:23ஐ வாசித்துப் பாருங்கள்
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும்
வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில்
கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும்
விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும்
விடாதிருக்கவேண்டும். இங்கு இயேசு தசமபாகம் செலுத்துவதை விடாதிருக்க
வேண்டும் என்று சொல்லுகிறார்.
நீதிபதி: உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டும், இதை இயேசு யாரிடம் சொல்லுகிறார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: வேதபரகரிடமும் பரிசேயரிடமும்
நீதிபதி: நீங்கள் வேதபாரகரா? பரிசேயரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஐயோ!…இரண்டுமே இல்லை.
நீதிபதி:
இயேசு இங்கு நியாயப்பிரமாண சட்டத்தைக் கைக்கொள்ளுவதை விடாதிருக்கவேண்டும்
என்று சொல்லுகிறார். அப்படியானால் நீங்கள் நியாயப் பிரமாணத்துக்குக்
கீழ்ப்பட்டவரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை
நீதிபதி: ஏன் இல்லை?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஏனென்றால் இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிவிட்டார்.
நீதிபதி: அதை அவர் எப்பொழுது நிறைவேற்றினார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அவர் சிலுவையில் மரித்தபோது
நீதிபதி: அப்படியானால் நியாயப்பிரமாணமானது இயேசு சிலுவையில் மரிக்கும்வரை அதிகாரத்திலிருந்தது அல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! சரிதான்…
நீதிபதி: நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
புரிகிறது யுவர் ஆனர்!…இயேசு மரிக்கும் வரை நியாயப்பிரமாணம்
அதிகாரத்திலிருந்தது. வேதபாரகரும் பரிசேயரும் அதற்குக் கீழ்ப்பட்டிருந்து
நியாயப்பிரமாணச் சட்டத்தின் ஒரு கட்டளையான தசமபாகத்தைச் செலுத்த வேண்டிய
கட்டாயத்திலிருந்தார்கள். எப்பொழுது நியாயப்பிரமாணம் நிறைவுற்றதோ அப்பொழுது
தசமபாகமும் நிறைவுற்றது.
நீதிபதி: அந்த வசனத்தை நீங்கள் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் எவற்றை தசமபாகமாகச் செலுத்தினார்கள்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒற்தலாம், வெந்தயம், சீரகம்
நீதிபதி: இங்கும் பணம் குறிப்பிடப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
இல்லை, ஆனால் உணவுப் பொருட்களை மக்கள் தசமபாகமாகக் கொடுத்தால் நாங்கள்
சபையை எப்படி நடத்துவது? நாங்கள் சபைக்கட்டிடம் கட்ட வாங்கிய கடனைச்
செலுத்த வேண்டும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், மற்ற
கட்டணங்களைக் கட்ட வேண்டும். எங்கள் குடும்பத்தையும் பராமரிக்க
வேண்டுமல்லவா? நாங்கள் எங்கள் மக்கள் தரும் பணத்தைச் சார்ந்து இருக்கிறோம்.
நீதிபதி:
உங்கள் தேவைகளைச் சொல்லி தவறுகளை நியாயப்படுத்த முடியாது பாஸ்டர்.ஜோன்ஸ்.
உங்கள் கடனையும் கட்டணங்களையும் கட்ட வேண்டுமென்பதற்காக வேத வசனத்தைத்
திரித்து தேவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராவிட்டால் தேவன்
சபிப்பார் என்று பயங்காட்டியும் அப்பாவி ஜனங்களைச் சுரண்டுகிறீர்கள்.
உங்களை ஆவிக்குரிய தகப்பனாகவும் தங்கள் மேய்ப்பனாகவும் ஏற்றுக்கொண்டு
உங்களை கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் என்று நம்பும் ஜனங்களை நடத்துகிற விதம்
இதுதானா? சொல்லுங்கள்.
நீதிபதி: முடிப்பதற்குமுன் உங்களுக்காக சில காரியங்களைச் சொல்லுகிறேன், பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! கேளுங்கள்.
தசமபாகம் என்பது பணமல்ல, அது ஆகாரம். அது ஏழைகளுடைய வயிற்றுப் பசி ஆற்ற கொடுக்கப்பட்டது உங்கள் ஆடம்பர கட்டடங்களுக்காக அல்ல.
அது நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது. புதிய ஏற்ப்பாட்டு சபைக்கல்ல.
அப்படியானால்
புதிய ஏற்பாட்டு சபையில் உள்ள ஏழைகளை எப்படி போஷிப்பது? புதிய ஏற்பாட்டு
விசுவாசிகள் தங்களிடையே இருந்த ஏழைகளை தாங்களே போஷித்தார்கள் என்று வேதம்
கூறுகிறது. ஆதித்திருச்சபை விசுவாசிகளின் காணிக்கைகள் அவர்களுக்குள்ளே
இருந்த தரித்திரரை போஷித்ததே தவிர அப்போஸ்தலரை கோடீஸ்வரர்கள் ஆக்கவில்லை.
புதிய
ஏற்பாட்டு விசுவாசிகள் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பவுல் 2கொரி9:7
இல் ஆலோசனை கூறுகிறார். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில்
நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன்
பிரியமாயிருக்கிறார். ஒருவன் தானே விருப்பப்பட்டு தனது வருமானத்தில் 10%
கொடுப்பது தவறு அல்ல. ஆனால் அப்படிக் கொடுக்கச்சொல்லி வற்புறுத்துவதே தவறு.
நீங்கள்
மறுபடியும் ஜனங்களை அடிமைத்தனத்துக்குள்ளும் சாபத்துக்குள்ளும்
தள்ளுகிறீர்கள் கலாத்தியர் 3:10 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தின்
கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண
புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில்
நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே” மேலும்
கலாத்தியர் 5:4 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக
விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று
விழுந்தீர்கள்” ஏற்கனவே விடுதலை பெற்ற மக்களை மறுபடியும்
அடிமைத்தனத்துக்குள்ளாக இழுத்துச் செல்லுவது எவ்வளவு பயங்கரமான பாவம்
என்பதை அறியீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்:
கனம் நீதிபதி அவர்களே! இப்பொழுது உணர்கிறேன். சுயாதீனம் பெற்ற மக்களை
மறுபடியும் அடிமைத்தன நுகத்துக்கு இழுத்துச் செல்லுவது எவ்வளவு பெரிய
பாவம்! இதை இவ்வளவு நாட்களாக அறியாது இருந்துவிட்டேன்.
நான் இருந்த சபையில் எந்த போதனையைக் கேட்டேனோ அதையே நானும் போதிக்க ஆரம்பித்து விட்டேன். வேத வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவில்லை.
ஆம்! நான் குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன்
No comments:
Post a Comment