Monday, 20 May 2013

பிசாசின் வஞ்சக வலை

ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப் பறந்து வந்து அம்மீனைத் தன் இரு கால்களாலும் பற்றிக் கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலுள்ள தன் இருப்பிடத்துக்குத் தூக்கிச் சென்றது. அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றது. ஆனால் கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் ஆழமாகச் செலுத்தி, இறுகப் பற்றியிருந்தது. மேலே போகப் போக கழுகு களைப்புற்றது. அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது சிரமமாக இருந்தது. தன் இருப்பிடத்திற்குப் போக முடியாது என்று உணர்ந்த கழுகு, மீனை கீழே போட்டுவிட முயன்றது. ஆனால் அதன் கூரிய நகங்கள் மிகவும் ஆழமாக பதிந்திருந்ததினால், மீனை உதறவும் முடியவில்லை.தொடர்ந்து பறக்க இயலாததால் சோர்ந்துபோக, அப்படியே கீழே விழுந்தது. மீன் விளையாடிக் கொண்டிருந்த அதே குளத்தில் அதுவும் வீழ்ந்து, மூழ்கி மாண்டது.

இதைப்போலத்தான் பிசாசானவன் பாவத்தை இன்பமாய் தோன்ற வைத்து, தன் வஞ்சக வலையில் ஏராளமான ஜனங்களை சிக்க வைத்து, அழித்து நரகத்திற்கு அழைத்துச் செல்கிறான். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வேதம் (2 தெசலோனிக்கேயர் 5: 21) கூறுகிறது. ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் பிசாசு வஞ்சித்தது. ஆகவே அவர்கள் தோட்டத்தை விட்டும், தேவனை விட்டும் விரட்டப்பட்டு, தேவ கிருபையை இழந்தார்கள். அதோடு, சாபமும் அவர்களைத் தொடர ஆரம்பித்தது. ஆரம்ப நாட்களில் இதுவெல்லாம் ஒரு பாவமா என்று எண்ணி ஆரம்பிக்கும் சின்ன சின்ன தவறுகள் நாட்கள் செல்லச் செல்ல, கழுகு மீனை பற்றிக்கொண்டதுபோல, நம்மை இறுகப் பற்றிக்கொண்டு உயிர்க்கொல்லியாய் மாறும். பிசாசானவன் நம்முடைய ஆத்துமாவை கொல்லவும் அழிக்கவுமே திரிந்துகொண்டிருக்கிறான். ‘‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாம் என்று வகைதேடி சுற்றித் திரிகிறான். ‘அநேக கள்ள தீர்க்கதரிசிகள் பெரிய அற்புதங்களைச் செய்து அநேகரை வஞ்சிப்பார்கள். இது என் வருகைக்கு முன் அடையாளம்’ என்று மத்தேயு 24ம் அதிகாரத்தில் இயேசு கூறுகிறார். ஆகவே நாம் மிகுந்த கவனமாயிருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி முடிவெடுங்கள். அதுதான் நமக்கும் நம் சமுதாயத்துக்கும்
நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment