இரண்டு மனம் வேண்டாம்
'இரண்டு
எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து,
மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை
அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
கூடாது' - (மத்தேயு - 6:24).
இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற பாடகர்
லூசியானோ பவரோட்டி (Luciano Pavarotti) ஒரு முறை சொன்னார், அவருடைய
சிறுவயதில் அவருடைய தந்தை ரொட்டி செய்பவராக இருந்தார். அவர் பவரோட்டியை
பாடுவதற்கு ஊக்கமளித்தார். நன்கு பாடுவதற்கு 'பாடி பாடி குரல் வளத்தை
பெருக்க வேண்டும்' என்று அவருடைய தந்தை அவருக்கு அறிவுறுத்தி வந்தார்.
பின்னர், Arrigo Pola என்பவரின் கீழ் இருந்து முறையாக பாட்டுபாட கற்று
கொண்ட பவரோட்டி, தன் தகப்பனிடம் வந்து, 'நான் பாடல் கற்று கொடுக்கும்
ஆசிரியராக வேண்டுமா? அல்லது பாடகனாகவே இருக்க வேண்டுமா' என்று கேட்டார்.
அப்போது அவருடைய தந்தை, 'நீ இரண்டு நாற்காலிகளில் அமர வேண்டும் என்று
விரும்பினால், நீ அவைகனின் நடுவே விழுந்து போவாய், உன் வாழ்க்கையில் வளம்
பெற வேண்டுமானால், ஒரே ஒரு நாற்காலியில் அமர பார்' என்று அறிவுரை கூறினார்.
'பின், அவருடைய அறிவுரையின்படியே நான் ஏழு வருடங்கள் படித்து, முதன்
முதலாக வெளிப்படையாக பாட ஆரம்பித்தேன். அதன்பின் ஆபரா பாடல்களில்
பாடுவதற்கு இன்னொரு ஏழு வருடங்கள் ஆனது, ஆனால் என் தந்தையின்
அறிவுரையின்படி நான், ஒரே ஒரு காரியத்தில் மாத்திரம் என் கவனத்தை
செலுத்தினதினால், நான் தேர்ச்சி பெற்ற பாடகனாக மாறினேன். புத்தகம்
எழுதுவதானாலும், எதை செய்வதானாலும் முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும்.
எல்லாவற்றையும் விட ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு, அதிலே முழு கவனத்தையும்
செலுத்தி, முதலிடம் பெற வேண்டும்' என்று கூறினார்.
பவரோட்டி
கூறியது உலக காரியத்திற்காக என்றாலும், ஆவிக்குரிய காரியத்திற்கும் அது
பொருந்தும். நாம் உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு
நாற்காலிகளிலும் உட்கார முயன்றால், இரண்டுக்கும் நடுவில் விழுந்து போவோம்.
'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து,
மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை
அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
கூடாது' என்ற இயேசுகிறிஸ்து கூறினார்.
நம்மில் அநேகர், ஞாயிற்று
கிழமைகளில் மட்டும் ஆலயத்திற்கு சென்று வந்துவிட்டு, பின்னர் வருகிற
வழியிலேயே கரி இறைச்சி வாங்கி வந்து, சமைத்து சாப்பிட்டு விட்டு,
சாயங்காலத்தில் டிவி முன்னால் உட்காருவதுதான், எல்லா நிகழ்ச்சியும் முடிந்த
பிறகே எழுவது, பின் ஜெபமாவது ஒன்றாவது, படுத்து தூங்கி, அடுத்து
நாளிலிருந்து, வேலைக்கும் வீட்டுக்கும் ஒரே ஓட்டம்தான்! இதில் கர்த்தருக்கு
எங்கே நேரம்? யாராவது ஊழியக்காரர் என்ன ஐயா ஜெபிக்கிறீர்களா? என்று
கேட்டால் எங்கே ஐயா, ஒரே பிஸி என்று சொல்வார்கள். ஆலயத்திற்கு சென்று
காணிக்கை போட்டுவிட்டு வந்தால் ஏதோ பெரிய காரியத்தை செய்து விட்டு வந்ததை
போன்ற நினைப்பு! 'பூமியும் அதின் நிறைவும் என்னுடையது' என்ற கர்த்தருக்கு
நீங்கள் போடும் காணிக்கை எந்த வகையில் திருப்திபடுத்தும்? நீங்கள் உங்களையே
காணிக்கையாய் தருவதையே கர்த்தர் எதிர்ப்பார்க்கிறார். தேவனுக்கும் உலக
பொருளுக்கும், உலகத்திற்கும் ஒரு நாளும் ஒரே நேரத்தில் நாம் ஊழியம் செய்ய
முடியாது.
நாம் படித்திருக்கும் ஜியாமெட்ரியில் (Geometry) இரண்டு
புள்ளிகளுக்கு இடையில் ஒரே ஒரு கோடு மாத்திரம் தான் வரைய முடியும். ஒரு
புள்ளியிலிருந்து அநேக கோடுகளை ஆரம்பிக்கலாம். ஆனால் அது முடியும்போது அது
வேறு இடத்தில்தான் முடியும். ஆகவே, நமக்கும் தேவனுக்கும் இடையில் அல்லது
நமக்கும் உலகத்திற்கும் இடையில் ஒரே ஒரு கோடு மாதிரி உறவுதான் இருக்க
முடியும். இரண்டுக்கும் இடையில் இருந்தால் விழுந்து போவோம். இந்த கடைசி
நாட்களில் தேவனுக்காக காரியங்களை சாதிக்க வேண்டிய நாம் இப்படி இரண்டு
பக்கத்திலும் இருந்தால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமுமில்லை. அனலுமில்லாமல்
குளிருமில்லாமல் இருந்தால் வாந்தி பண்ணிபோடுவேன் என்று கர்த்தர்
எச்சரிக்கிறார். கர்த்தர் நம்மை வேண்டாம் என்று சொல்வாரானால், நமக்கு எந்த
நம்பிக்கையும் இல்லாமல் போகும்.
யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி,
'கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை
யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு
அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள்
வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?
நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்' - (யோசுவா
24:15). இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய சொந்த ஜனம் தான். ஆனாலும் அவர்கள்
வழிவிலகி வேறே தேவர்களை சேவித்தார்கள். அப்போது தேவனுக்காக யோசுவா
வைராக்கியமாய் எழுந்து இந்த வார்ததைகளை அந்த ஜனத்திற்கு சொன்னார். அதுப்போல
நாமும் இந்த நாட்களில் கர்த்தரும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று
வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு
ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று
தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே
சேவிப்போம். ஆமென் அல்லேலூயா!
கர்த்தரை மாத்திரம் சார்ந்து
ஜீவிப்போம். உலகமும் அதன் எல்லாமும் ஒரு நாள் அழிந்து போகும். அழிந்து
போகின்ற ஒன்றை நாம் சார்ந்து வாழாதபடி அழியாத தேவனை நாம் சார்ந்து
கொள்வோம். கர்த்தருக்காக சாதிப்போம். நம் வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும்.
No comments:
Post a Comment